தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடகாவில் 3–வது நாளாக விவசாயிகள் போராட்டம்
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை எதிர்த்து கர்நாடகாவில் விவசாயிகள் 3–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டியா,
கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் இருந்து வருகிறது. அதற்கு போதிய மழை பெய்யவில்லை எனவும், இதனால் மாநிலத்தில் வறட்சி நிலவுவதாகவும் காரணம் கூறி வருகிறது.
அதேபோல நடப்பு ஆண்டிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட காவிரி டெல்டா விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.
தண்ணீர் திறப்புஇதையடுத்து, கடந்த 29–ந் தேதி இரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதை கண்டித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர், மாணவர்கள் மண்டியா, மைசூரு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதாவது, வினாடிக்கு 2,673 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
3–வது நாளாக போராட்டம்இதை கண்டித்து 3–வது நாளாக நேற்றும் மண்டியா மாவட்டத்தில் மத்தூர், மலவள்ளி, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, பாண்டவபுரா மற்றும் மைசூரு மாவட்டத்திலும் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் மண்டியாவில் உள்ள காவிரி நீர்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கப்பட்டணா அருகே மைசூரு–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் செய்தனர். இதனால் மைசூரு–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
எச்சரிக்கைஇதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் மாதேகவுடா கூறுகையில், ‘‘கர்நாடக விவசாயிகள் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த வேளையில் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கும் தண்ணீரை அரசு நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மாநில அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மண்டியா போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.