புகை பிடிப்பதை நிறுத்த சொன்னதால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாற்றுதிறனாளி
புகை பிடிப்பதை நிறுத்த சொன்ன மாற்றுதிறனாளியை மூன்று இளைஞர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தனர்.
சண்டிகர்,
புகை பிடிப்பதை நிறுத்த சொன்ன மாற்றுதிறனாளியை மூன்று இளைஞர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தனர்.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் வசித்து வருகிறார் உபேந்திர பிரசாத் (45). இவர் நேற்று தன் சொந்த ஊருக்கு செல்ல சண்டிகர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி ரயில் நிலையத்துக்கு செல்ல இருந்தார்.
கேரளா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸில் மாற்று திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் ஏறினார். அதே பெட்டியில் 20-24 வயதுள்ள இளைஞர்கள் மூன்று பேர் பயணம் செய்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
ரயில் புறப்பட்ட பிறகு மூன்று இளைஞர்களும் புகை பிடிக்க ஆரம்பித்தனர். இதை தட்டிகேட்ட பிரசாத்தை அடித்து உதைத்து அவரது பர்ஸ், மொபைல், ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர்.
கீழே விழுந்த பிரசாத் நினைவை இழந்தார். கால் மற்றும் தோள்பட்டையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அடிபட்டு கிடந்த பிரசாத்தை கண்டவர்கள் அருகில் உள்ள அம்பாலா சிவில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிரசாத்தை தாக்கிய மூன்று பேர் மீது கொலை முயற்சி, கொள்ளை, சட்ட விதிமீரல் ஆகிய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து ஆதாரங்களை திரட்ட ரயில்வே அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.