தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் சிக்கினர்
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்களூரு
டி.வி. பார்க்க...
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கடிருத்யவாரா கிராமத்தில் சிறுமி ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். சிறுமியின் வீட்டின் அருகே சுதிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுமிக்கு உறவினர் ஆவார். சிறுமி வீட்டில் டி.வி. கிடையாது என கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி சுதிர் வீட்டிற்கு சென்று டி.வி. பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளாள். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சுதிர், கதவை பூட்டி கொண்டு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைதொடர்ந்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
கருக்கலைப்பு
இதனால் பயந்துபோன சிறுமி, இதுகுறித்து வெளியே கூறாமல் இருந்துள்ளாள். இதற்கிடையே சிறுமி கர்ப்பமடைந்துள்ளாள். இதுபற்றி அறிந்த சுதிர், தனது நண்பர்களான மனோகரா (வயது 23), மாதவா (30) உள்பட 3 பேரும் சேர்ந்து சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். எனினும், அவர் சிறுமியை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு வரவழைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெல்தங்கடி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
2 பேர் கைது
மேலும், சுதிர் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய மனோகரா மற்றும் மாதவா ஆகிய 2 பேரும் மங்களூருவில் உள்ளதாக பெல்தங்கடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மங்களூருவுக்கு சென்ற போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சுதிக் உள்பட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.