இரட்டை கொலை வழக்கில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பெங்களூரு அருகே கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது இந்த சம்பவம் நடந்திருந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

பெங்களூரு:

2 வாலிபர்கள் கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா தொட்டபெலவங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வந்தவர் பரத் (வயது 23). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரதீக் (20). இவர்கள் 2 பேரும் தங்களது கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் கடந்த 17-ந் தேதி தொட்டபெலவங்களாவில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றிருந்தனர்.

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தும் விவகாரத்தில் பரத்திற்கும், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு மோதலாக மாறியது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பரத் மற்றும் பிரதீக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொட்டபள்ளாப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மந்திரி எம்.டி.பி.நாகராஜ் உறுதி

இதுகுறித்து தொட்டபெலவங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் பரத், பிரதீக்கை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி, அவர்களது நண்பர்கள் மற்றும் கிராம மக்களும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற மந்திரி எம்.டி.பி.நாகராஜ், குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் கைது செய்வதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பரத் மற்றும் பிரதீக்கை கொலை செய்தது வினய், ஸ்ரீமூர்த்தி, அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையில், நேற்று அதிகாலையில் தொட்டபெலவங்களாவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ரெயில் தண்டவாள பகுதியில் வினய், ஸ்ரீமூர்த்தி பதுங்கி இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

2 பேர் சுட்டுப்பிடிப்பு

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஹரீஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸ்காரர் ஒருவரை தாக்கிவிட்டு 2 பேரும் தப்பி ஓட முயன்றார்கள். சரண் அடையும்படி இன்ஸ்பெக்டர் ஹரீஷ் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தார். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து விட்டனர்.

அதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஹரீஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 பேரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் வினய், ஸ்ரீமூர்த்தியின் கால்களில் குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போட்டிகளுக்கு தடை

வினய், ஸ்ரீமூர்த்தி தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நேற்று காலையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தை பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் போது நடந்த இரட்டை கொலையில், தலைமறைவாக இருந்த வினய், ஸ்ரீமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதை மல்லிகார்ஜுன் உறுதி செய்தார்.

மேலும் சட்டசபை தேர்தல் முடியும் வரை பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதித்திருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொட்டபெலவங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மந்திரி எம்.டி.பி.நாகராஜ் கூறியபடி 24 மணிநேரத்தில் கொலையாளிகள் 2 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்