உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல்
நவலகுந்து அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உப்பள்ளி-
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார், தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தார்வார் மாவட்டம் நவலகுந்து அருகே உள்ள சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி எஸ்.எஸ்.சம்பகாவி மற்றும் இன்ஸ்பெக்டர் டி.சி.பட்டீல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெலகாவியை சேர்ந்த தொழில் அதிபர் மாணிக் சந்த் என்பதும், தொழில் சம்பந்தமாக ரூ.2½ லட்சம் ரொக்கம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.2½ லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை போலீசார் சோதனை செய்தனர். பஸ்சின் இருக்கைக்கு கீழே ஒரு துணிப்பை கிடந்தது. அதில் ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அந்த பணம் யாருடையது என்று தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நவலகுந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.