குளிருக்கு தீ மூட்டியதில் விபரீதம்: 2 குழந்தைகள் பலி - பெற்றோர் சுயநினைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி

நிலக்கரியின் புகை அறை முழுவதும் பரவியதால் அங்கு இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.

Update: 2024-01-09 12:30 GMT

லக்னோ,

உத்தர பிதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள மைலானியில் வசித்து வந்தவர் ரமேஷ் விஸ்வகர்மா. இவரது மனைவி ரேணு. இந்த தம்பதிகளுக்கு அனிஷிகா (வயது 8), கிருஷ்ணா (வயது 7) ஆகிய குழந்தைகள் இருந்தனர். நேற்று இரவு குளிர் அதிகமாக இருந்ததால் தூங்குவதற்கு முன்பு குளிரைத் தணிப்பதற்காக அறையில் நிலக்கரியால் நெருப்பு மூட்டி தூங்கியுள்ளனர்.

இந்நிலையில், நிலக்கரியின் புகை அறை முழுவதும் பரவியதால் அங்கு இருந்தவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து இன்று காலை அவர்கள் யாரும் அறையில் இருந்து வெளியேவராததை கண்டு ரமேஷின் அண்ணி உமா தேவி கதவை தட்டியுள்ளார். வெகுநேரம் ஆகியும் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உமா தேவி அருகில் உள்ளவர்களை அழைத்து அறையின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 4 பேரும் சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு மைலானியில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் குழந்தைகளான அனிஷிகா மற்றும் கிருஷ்ணா இறந்துவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து ரமேஷ் மற்றும் ரேணு ஆகிய இருவரையும் மேல் சிகிச்சைக்காக லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த குழந்தைகளை உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்