2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடைநீக்கம் ஏன்?
வாக்காளர்கள் தங்கல்கள் திருடப்படவில்லை என்றால் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரு-
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்கள் திருடப்படவில்லை, வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், பா.ஜனதா தலைவர்களும் கூறி வந்தனர். தற்போது இந்த விவகாரங்களில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது வாக்காளர்களின் பெயர்கள் நீக்கும் விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். வாக்காளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்திலும், பெயர்கள் நீக்கிய விவகாரத்திலும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்ன சொல்ல போகிறார். அவர் தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். முதல்-மந்திரியின் அனுமதி மற்றும் கவனத்திற்கு வராமல் வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளிக்க சாத்தியமாகுமா?. பா.ஜனதா ஆட்சியில் நடைபெறும் ஒவ்வொரு முறைகேடுகளையும் காங்கிரஸ் அம்பலப்படுத்தி வருகிறது. அதுபோல், வாக்காளர்களின் தகவல்களை திருடிய விகாரத்தையும் காங்கிரஸ் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.