நடுவானில் பறக்கும்போது வந்த உத்தரவு... மும்பை சென்ற 2 கோ பஸ்ட் விமானங்கள் சூரத்தில் தரையிறக்கம்
மும்பை சென்ற இரண்டு கோ பஸ்ட் விமானங்கள் திடீரென சூரத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
சூரத்,
இந்திய விமானப்போக்குவரத்து சந்தையில் 6.9 சதவிகித பங்குகளுடன் கோ பஸ்ட் (Go First) விமான நிறுவனம் 5-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தாங்கள் திவாலாகிவிட்டதாக கோ பஸ்ட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், திவால் அறிவிப்பை கோ பஸ்ட் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அறிக்கையாக தெரிவித்துள்ளது.
திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ள கோ பஸ்ட் விமான நிறுவனம் பயணிகள் விமான சேவையை இன்று முதல் 3 நாட்களுக்கு நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 5-ம் தேதி வரையிலான அனைத்து விமான சேவையும் நிறுத்தப்படுவதாக கோ பஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ஸ்ரீ நகர் மற்றும் டெல்லியிலிருந்து மும்பை சென்ற இரண்டு கோ பஸ்ட் விமானங்கள் குஜராத்தின் சூரத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. திடீரென சூரத்தில் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் இரண்டு விமானங்களும் சூரத்தில் இருந்து புறப்பட்டன.
இது தொடர்பாக சூரத் விமான நிலைய இயக்குனர் ரூபேஷ் குமார் கூறும்போது, விமானங்கள் திருப்பி விடப்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.