நந்தி மலைக்கு 'ஜாலிரைடு' சென்று திரும்பியபோது 2 என்ஜினீயர்கள் சாவு

பெங்களூருவில் தடுப்பு சுவரில் கார் மோதி 2 என்ஜினீயர்கள் பலியானார்கள். அவர்கள் நந்திமலைக்கு ‘ஜாலிரைடு’ சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-08-13 21:02 GMT

பெங்களூரு:-

கார் கவிழ்ந்தது

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே மத்திகெரேயில் வசித்து வந்தவர் கார்த்திக் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் (23). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். கார்த்திக்கும், ஆதர்சும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் 2 பேரும், தங்களது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து காரில் நந்திமலைக்கு 'ஜாலிரைடு' ெசன்றனர்.

பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் 5 பேரும் காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். பெங்களூரு அருகே தேவனஹள்ளி, பாலனஹள்ளி கேட்டில் உள்ள பெங்களூரு-பல்லாரி ரோட்டில் அவர்களது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி பல்டி அடித்து கவிழ்ந்தது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதனால் காருக்குள் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தார்கள். இதுபற்றி அறிந்ததும் எலகங்கா போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் மற்றும் ஆதர்ஷ் இறந்து விட்டனர். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் நந்திமலைக்கு 5 பேரும் காரில் 'ஜாலிரைடு' சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய போது அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் தடுப்பு சுவரில் மோதி 2 என்ஜினீயர்களும் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்