திருட்டு வழக்கில் அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது ; ரூ.13 லட்சம் நகைகள் மீட்பு
குடகில் திருட்டு வழக்கில் அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் நகைகள் மீட்கப்பட்டது.;
குடகு;
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பாலிபெட்டா மேகூரு ஹூஸ்கேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் பாலிபெட்டாவிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றனர்.
இதுகுறித்து சுப்பையா, சித்தாபுரா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த திருட்டு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அசாமை சேர்ந்தவர் குர்பன் அலி, மஹிருதீன் அலி என்று தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 247 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.13 லட்சம் என்று கூறப்படுகிறது. கைதான 2 பேரும் குடகு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதை தொழிலாக கொண்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.