டெல்லியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது

டெல்லியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-09-06 21:11 GMT

காரில் போதைப்பொருள் கடத்தல்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வலை விரித்த போலீசார், டெல்லியின் காலிண்டி கஞ்ச் பகுதியில் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

முஸ்தபா ஸ்டானிக்சாய், ரஹிமுல்லா ரஹிமி என்ற அந்த இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களில் ஒருவரிடம் இருந்து 1.360 கிலோ, மற்றொருவரிடம் இருந்து சுமார் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு வாகனமும் மடக்கப்பட்டது. அதில் 16 மூட்டைகளில் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மொத்த எடை 311.4 கிலோ ஆகும்.

சர்வதேச மதிப்பு ரூ.1,200 கோடி

அந்த ஆப்கானியர்கள் தெரிவித்த தகவலின்படி, உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் மேலும் மெத்தாம்பெட்டமைனும், ஹெராயினும் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் 312.5 கிலோ மெத்தாம்பெட்டமைனும், 10 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் சர்வதேச மதிப்பு 1,200 கோடி ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலுக்கும், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்