1.93 லட்சம் 'போக்சோ' வழக்குகள் நிலுவை - மத்திய அரசு தகவல்

1.93 லட்சம் ‘போக்சோ’ வழக்குகள் நிலுவை இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2022-12-09 00:45 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

மாநிலங்களவையில் நேற்று, 'போக்சோ' சட்டங்கள், அதற்கான விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான சில கேள்விகளுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்காக 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் நிதியுதவியுடன் ஒரு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி 31-3-2023 வரை ஆண்டுக்கு ரூ.1,572.86 கோடி (மத்திய அரசின் பங்கு ரூ.971.70 கோடி) செலவழிக்கப்படுகிறது. இதன்பேரில் கடந்த அக்டோபர் மாதம் வரை 413 பிரத்தியேக போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 733 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவி திட்டம் 31-3-2023 செயல்படும்.

கடந்த அக்டோபர் மாதம் வரை 1 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டு உள்ளன. இருப்பினும், 1 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் இத்திட்டத்தை மார்ச் 2023-க்கு பிறகும் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி, இத்திட்டத்தின் மதிப்பீட்டு ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்