கர்நாடகா: 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தீர்த்து கட்டிய கும்பல்
காணாமல் போன நாளில் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசிய 3 நபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.;
பிதார் ,
கர்நாடகாவின் பிதார் மாவட்டம், குணதீர்த்தவாடி கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ம் தேதி காணாமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இதற்கிடையே, காணாமல் போன பெண், கடந்த 1-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், காணாமல் போன நாளில் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசிய 3 நபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதில் ஒருவன், அந்த பெண்ணுக்கு தெரிந்தவன், அதே ஊரைச் சேர்ந்தவன். அவனைப் பிடித்து விசாரித்தபோது, இரண்டு பேருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும், விசாரணையின் அடிப்படையிலும் எப்.ஐ.ஆரில் கற்பழிப்பு பிரிவுகளை சேர்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.