இந்து அமைப்பினர் 19 பேர் விடுதலை
காபு தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான இந்து அமைப்பினர் 19 பேரையும் விடுதலை செய்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
உடுப்பி:-
தேவாலயம் மீது தாக்குதல்
உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிர்வா போலீஸ் சரகத்திற்குட்பட்ட கடிங்கேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுங்கி அனைத்தையும் சூறையாடினர். மேலும் இதை தடுப்பதற்கு வந்த கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் இதுகுறித்து அப்போதைய பொறுப்பில் இருந்த தேவாலய நிர்வாகி ரோஷன் என்பவர் சிர்வா போலீசில் புகார் அளித்தார்.
19 பேர் கைது
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களில் தாக்குதலில் ஈடுபட்டதாக விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள பிரமுகர்கள் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள், மொபைல், தாக்குதல் நடத்திய போது அணிந்திருந்த டீ-சர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு உடுப்பி 3-வது கூடுதல் சிவில் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
அனைவரும் விடுதலை
கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி விநாயக் வான்கடே தீர்ப்பு கூறினார். அதில் அரசு தரப்பு வக்கீல் மற்றும் போலீசார் தரப்பில் ஆஜரான சாட்சியங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அணிந்ததாக அடையாளம் காட்டவில்லை. மேலும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே கைதான 19 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.