இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

Update: 2023-12-10 09:26 GMT

புதுடெல்லி,

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று பரவியது.

இதனால், 2020-ம் ஆண்டில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. சிறு, நடுத்தர கடைகள், வணிக வளாகங்கள் என அத்தியாவசிய மற்றும் ஆடம்பர தேவைகளுக்கான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வகை போக்குவரத்து சேவையும் முடங்கின. அரசின் முன்அனுமதி பெற்ற பின்னரே ஒரு நகரில் இருந்து குறிப்பிட்ட தொலைவிலான மற்றொரு பகுதிக்கு செல்ல கூடிய நிலை காணப்பட்டது.

இதன்பின் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து மற்றும் உணவு பொருட்கள் பெறுவதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டன. நாட்டில் முதல் மற்றும் 2-வது கொரோனா அலையில், எண்ணற்ற மக்கள் கொரோனா பாதிப்புகளை சந்தித்தனர். பலர் உயிரிழந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தத்தில் 4.44 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 5,33,306 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் கேரளாவில் அதிக அளவில் தொற்று பதிவாகி உள்ளது என அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. இதன்படி, மொத்தம் 895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி பதிவாகும் சராசரி தொற்று எண்ணிக்கை 100 ஆக உள்ளது. சமீபத்திய தொற்று அதிகரிப்பானது, குளிர் காலத்துடன் தொடர்புடையது. இன்புளூயன்சா போன்ற வியாதிகள் அதிகரிப்பால் இந்த நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என அமைச்சகம் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்