15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்...?

பா.ஜ.க. கூட்டணியில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-07 04:37 GMT

புவனேஷ்வர்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன. அந்த வகையில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தி.மு.க. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

அதேபோல், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒடிசா ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 2009ம் ஆண்டு வரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிஜு ஜனதா தளம் விலகியது.

ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல், ஒடிசா சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிஜு ஜனதா தள மூத்த தலைவர்கள் நேற்று நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினர். அதேபோல், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்