நைஜீரியாவை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக நைஜீரியாவை சேர்ந்தவர்ககள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு மத்திய மண்டல போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் கவுடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
11 பேர் கைது
பெங்களூரு மத்திய மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள்
வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மத்திய மண்டலத்தில் உள்ள அசோக்நகர் மற்றும் கப்பன்பார்க் போலீசார் இணைந்து போதைப்பொருட்கள் விற்று வந்த கும்பலை சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் பெயர் முகமது ஹரோன், முகமது ஒருவில், முகமது இலியாஸ், அப்துர் ஆபு, அகமது, முகமது மோசா, மான்னீத், முகமது பிலால், ஜான் பால், ஜோசப் பெஞ்சமின் மற்றும் இஸ்மாயில் என்பதாகும். இவர்களில் முகமது ஹரோன், முகமது ஒருவில், அப்துர் ஆபு நைஜீரியாவை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ரூ.1 கோடி போதைப்பொருட்கள்
பெங்களூருவில் உள்ள கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், வசதி படைத்த நபர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு இந்த கும்பலினர் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். கைதானவர்களில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தங்களது விசா முடிந்த பின்பு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்ததுடன், போலி ஆவணங்களை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
கைதான 11 பேரிடம் இருந்து கஞ்சா, எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், போதை பவுடர், 2 கார்கள், விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சம் ஆகும். கைதான 11 பேரிடமும் அசோக்நகர் மற்றும் கப்பன்பார்க் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு சீனிவாஸ் கவுடா கூறினார்.