விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்

பங்காருபேட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இந்த நிலையில் அந்தப்பகுதி மக்கள் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-12-04 21:19 GMT

கோலார் தங்கவயல்:-

காட்டு யானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா பூதிகோட்டை கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு தமிழக வனப்பகுதியில் இருந்து ெவளியேறிய 10 காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்தன. அந்த யானைகள் அங்குள்ள பயிர்களை மிதித்து நாசப்படுத்தின. பின்னர் அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

இந்த நிலையில், நேற்று காலை விளைநிலங்களுக்கு சென்ற அந்தப்பகுதி மக்கள் பயிர்கள் நாசமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இரவில் காட்டு யானைகள் வந்து பயிர்களை நாசப்படுத்தி சென்றது தெரியவந்தது. இதன்காரணமாக பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று பூதிகோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று பங்காருபேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதனால் அந்த காட்டு யானைகள் தமிழக வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்கவும், நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்