ஒடிசா ரெயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை - தமிழக குழு தகவல்

ஒடிசா ரெயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-04 04:10 GMT

புவனேஸ்வர்,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா சென்றுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் இருந்து 131 பயணிகள் சிறப்பு ரெயிலில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளிடம் நலம் விசாரித்தனர். பின்னர் மீட்கப்பட்டவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழக குழுவில் உள்ள போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தா ராணுவ மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என தகவல் வெளியான நிலையில் தமிழக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்