பெங்களூரு தம்பதி உள்பட 3 பேர் சாவு

சிக்கமகளூருவில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்துகளில் பெங்களூருவை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

சிக்கமகளூரு:-

தம்பதி சாவு

பெங்களூருவை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 40). இவரது மனைவி ஸ்வேதா (35). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பெட்டதாவரகெரே கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கார் சீனிவாசின் கட்டுபாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

இதை அறிந்த சீனிவாஸ், அந்த காரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் நிற்காமல் சென்ற காா், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த சீனிவாஸ், ஸ்வேதா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

பின் இருக்கையில் இருந்த 2 குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த 2 குழந்தைகளையும் மீட்டு சிவமொக்கா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி-கார் மோதல்

பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தரிகெரே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல கொப்பா தாலுகா ஹரிஹரபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட நாகலாபுரா கிராமத்தில் மினி லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கொப்பா தாலுகா கம்மக்கி கிராமத்தை சேர்ந்த கிரீஸ் (வயது 28) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஹரிஹரபுரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஹரிஹரபுரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்