எங்கு போட்டியிட்டாலும் சித்தராமையாவை மக்கள் புறக்கணிப்பார்கள்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
People will ignore Siddaramaiah wherever he contests
சிக்கமகளூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகை
சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் நேற்று பா.ஜனதாவின் ஜனசங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று காலை பெங்களூருவில் இருந்து கடூருக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அவருக்கு பா.ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஹெலிபேடு தளத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் புறக்கணிப்பார்கள்
கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஜனசங்கல்ப யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் நாங்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். வடகர்நாடகத்தில் நடந்த ஜனசங்கல்ப யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சித்தராமையா தனக்கு வயதாகிவிட்டதாகவும், கடைசி தேர்தல் இதுதான் எனவும் கூறி வாக்கு சேகரிக்கிறார். அவர் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ கடவுள் அருள் புரியட்டும்.
ஆனால் சட்டசபை தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது, யாரை முதல்-மந்திரி ஆக்குவது என்பது மக்கள் கையில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முதல்-மந்திரி பதவிக்கு போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா போட்டியிட தொகுதி தேடி அலைகிறார். எங்கு சென்றாலும் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரி பதவி மீது குறி
இதையடுத்து கடூரில் உள்ள ஏ.பி.எம்.சி. வளாகத்தில் நடந்த ஜனசங்கல்ப யாத்திரையை பசவராஜ் பொம்மை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி ஷோபா, மந்திரி பைரதி பசவராஜ், சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்துகொண்டனர். இதை யடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கடூர் தொகுதியில் ரூ.2,800 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. இதற்கு பெல்லி பிரகாஷ் எம்.எல்.ஏ. தான் காரணம். அவர் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பதவிக்காக மோதல் நடந்து வருகிறது. அவர்கள் இருவரும் முதல்-மந்திரி பதவி மீது குறியாக உள்ளார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது.
100 சதவீத ஊழல்
முந்தைய காங்கிரஸ் கட்சியில் நீர்ப்பாசன திட்டத்தில் 100 சதவீத ஊழல் நடந்துள்ளது. எங்கள் ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்ரா அணையில் இருந்து சிக்கமகளூரு, கடூருக்கு தண்ணீர் கொண்டு வந்து ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 7,500 புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரை தொடர்ந்து எடியூரப்பா, ஷோபா ஆகியோரும் பேசினர். இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹெலிகாப்டர் மூலம் தரிகெரேவுக்கு சென்றார்.