18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் ‘அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடருவது உறுதி’ பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடருவது உறுதி என்று பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Update: 2019-04-16 21:15 GMT
சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க. வுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் வடசென்னை தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வடசென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். ராயபுரம் கல்மண்டபம் அருகே பிரசாரம் செய்தபோது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

வடசென்னை தொகுதி வேட்பாளர் மோகன்ராஜூக்கு, முரசு சின்னத்தில் மாபெரும் வெற்றியை தந்து, வடசென்னை தொகுதியை முரசு வென்றது என்ற வரலாற்றை தர வேண்டும். கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் ஒரே கரமாக இணைந்து இருங்கள். ஓட்டுக்கு காசு தரும் தி.மு.க.வை ஓட ஓட விரட்ட வேண்டும்.

ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோருக்கு விசுவாசமாக நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தி.மு.க.வுக்கு தர்ம அடியாக, மரண தண்டனையாக இருக்க வேண்டும்.

நம்முடைய வேட்பாளர் மோகன்ராஜூவை எதிர்த்து மின்வெட்டு வீராசாமியின் மகன் களம் இறங்கி இருக்கிறார். கொள்ளைக்காரர்களுக்கு உங்கள் ஓட்டா? கொள்கை உடைய நம்முடைய வேட்பாளருக்கு உங்கள் ஓட்டா? என்பதை சிந்தித்து சிறந்த முறையில் வாக்களிக்க வேண்டும்.

தேனீக்களை விட சுறுசுறுப்பாக ஒன்றாக இணைந்து மாபெரும் வெற்றியை நம் கூட்டணிக்கு நாளும் நமதே, நாற்பதும் நமதே என பெற்றுத்தரவேண்டும்.

18 தொகுதி இடைத்தேர்தல்களிலும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்று, இந்த ஆட்சி தொடர போவது உறுதி. அதற்கு தே.மு.தி.க. என்றைக்கும் துணை நிற்கும். நம்முடைய வெற்றி உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்