மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்
மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எல்லையையொட்டிய மத்தியப் பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆப்கானை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒரு பயங்கரவாதியின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளுக்கும் அவனுடைய புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயங்கரவாதி ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தை சேர்ந்தவன் என தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் எவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தார்கள் என்பது தெரியவில்லை. குஜராத், ராஜஸ்தான் மாநில எல்லையையொட்டி மத்திய பிரதேச மாநிலங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், குஜராத் மாநில போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்கின்றனர். ரெயில்களிலும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.