வருமானவரித் துறை சோதனையின் போது துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.;

Update: 2019-03-31 22:47 GMT
சென்னை,

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மாவட்ட அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் வேலூர் மாவட்டம், காட்பாடியில் எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து முறையாக வருமான வரித்துறையிடம் இருந்து விரிவான அறிக்கை பெறப்படவில்லை. முதல் கட்ட அறிக்கையின்படி அவருடைய வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விரிவான அறிக்கை கிடைத்த உடன் உரிய நடவடிக்கை இருக்கும். ஆனால் அது குறித்து தற்போது கூற இயலாது.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணம் முழுவதும் குறிப்பிட்ட கட்சிகளுடையது என்று தற்போது சொல்ல முடியாது. வேட்பாளர்கள் செலவு செய்வது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.19 கோடி திரும்ப அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு அதிகாரிகள் யாருக்கும் சார்பின்றி பணியாற்ற வேண்டும். தலைமை தேர்தல் ஆணையம் மீது தி.மு.க.வின் புகாருக்கு தலைமை தேர்தல் ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் பணியாற்றும் நாங்கள் சார்பின்றி பணியாற்றுவோம். தி.மு.க. அளித்த மனு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 1,400 பேர் ஓட்டுப்போட முடியும். ஓட்டுப்பதிவு காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைசீட்டு முறை காரணமாக வாக்களிப்பதில் சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். அரியலூர் மாவட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஐ.பி.எஸ். அதிகாரி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது முறையான விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகுவை, சென்னை தலைமைச் செயலகத்தில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இருந்தபோது, அவருடைய வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வருமானவரி சோதனையா? அல்லது தேர்தல் பணி நிமித்தமான சோதனையா? என்று தெரிவிக்காமல் அவர் வீட்டில், சோதனை என்ற பெயரில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். இந்த சோதனை மூலம் அவர் ‘அப்பழுக்கற்றவர்’ என்பதை தேர்தல் ஆணையம் உலகிற்கு உணர்த்தியமைக்கு நன்றி.

இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய மற்றும் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியினர் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். தி.மு.க.வுக்கு எத்தனை சோதனை வந்தாலும், ஜனநாயகத்தை மட்டும் நம்பி, தேர்தலில் நிற்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளால், தி.மு.க. அஞ்சிவிடப் போவதில்லை. ஆனால் ஜனநாயகத்திற்கும் அதன் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கிறது என்பது தான் எங்களின் வருத்தமாகும். இனிவரும் காலங்களிலாவது ஆளும்கட்சியினர் வாக்குகளுக்கு, ஊழல் பணத்தை கொடுத்து வென்று விடலாம் என்ற எண்ணத்தை கைவிடும் அளவிற்கு, தேர்தல் ஆணையத்தின் பணிகள் அமைந்திடவும், ஆணையத்தின் கொள்கையான நியாயமான, நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் என்பதை உறுதி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்