தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்

Update: 2022-05-02 19:35 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 478 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சக்கர நாற்காலி

இதையடுத்து தாட்கோ மூலம் அரசு, அரசு சாரா அமைப்புகளில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ததற்கான அடையாள அட்டையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 2 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியையும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 மாற்றுத்திறனாளிகள் இறந்ததற்காக அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.17 ஆயிரம் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், தனித்துணை ஆட்சியர் கற்பகம் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்