2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை காண விழுப்புரத்தில் குவிந்த திருநங்கைகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவை காண விழுப்புரம் நகருக்கு திருநங்கைகள் வந்துள்ளனர். இவர்கள் சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.

Update: 2022-04-16 17:44 GMT

விழுப்புரம்,

3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் அடையாளம் என்றாலே அது விழுப்புரம்தான். ஏனெனில் அவர்கள் குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில் விழுப்புரம் அருகே கூவாகம் என்ற கிராமத்தில் உள்ளது. 

முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் இருந்த நிலையில் மாவட்டம் பிரிவினையின்போது இக்கிராமம் விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது.

கூவாகம் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் திருநங்கைகள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வார்கள்.


2 ஆண்டுகளுக்கு பிறகு

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கூவாகம் திருவிழா நடைபெறுகிறது.


இந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். மறுநாள் அதாவது 20-ந் தேதி (புதன்கிழமை) சித்திரை தேரோட்டம் நடக்கிறது.

விழுப்புரத்தில் குவிந்தனர்

இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இவர்கள் சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.

இவர்களை பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் முன்பு உலா வருகின்றனர். இதனால் கூவாகம் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.



கூவாகம் திருவிழாவை காண விழுப்புரத்திற்கு திருநங்கைகள் நம்மிடம் பதிவு செய்த கருத்துக்கள் இதோ...

சுதா:- 
வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த திருவிழாதான் எங்களுடைய வாழ்க்கையிலேயே மிகுந்த சந்தோஷமான நாள். நாங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட கூவாகம் திருவிழாவைதான் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடப்பது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 நாங்கள் ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் சென்று வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எங்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அதை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.



ஹரிணி:-

 தி.மு.க. ஆட்சியில் எங்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்ததால் எங்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் மத்தியில் எங்களுக்கென்று தனி மதிப்பு, மரியாதை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த கசப்பான அனுபவங்களை மறக்கும் அளவிற்கு நிறைய சலுகைகளை வழங்கியுள்ளனர்.

 இதனால் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தாததால் எங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதனையும் சேர்த்து நிறைவேற்ற உள்ளோம்.

தனுஷ்கா:- 

ஒரு காலத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்று இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. எங்களில் நிறையபேர் அரசு துறை மற்றும் தனியார் துறையிலும் சாதித்து வருகின்றனர். 

எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இன்னும் நிறைய சலுகைகளை வழங்க வேண்டும். குறிப்பாக இலவச கல்வியை தர வேண்டும். அதுபோல் எங்களில் நிறையபேர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். 

அவர்களின் படிப்பிற்கேற்ப அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். எங்களுக்கும் திறமைகள் இருக்கிறது. திருநங்கைகளால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்