அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-08-13 17:19 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை 9 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள், முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

வீரவாழி மாரியம்மன்

இதேபோல் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவிலில் காலை 8 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழுப்புரம் எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் அருகில் உள்ள முத்துமாரியம்மன், நாப்பாளைய தெருவில் உள்ள சண்டபிரசண்ட மாரியம்மன், மருதூர் மாரியம்மன், கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன், பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன், மாம்பழப்பட்டு முத்துமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்