நெல்லை மாநகர பகுதியில் பரவலாக மழை

நெல்லை மாநகர பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மரம் முறிந்து விழுந்ததால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-07 19:04 GMT
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மரம் முறிந்து விழுந்ததால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பரவலாக மழை

நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, பழைய பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை கடுமையாக வெயில் அடித்தது. மாலை 3.30 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

நெல்லை சந்திப்பில் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. இதேபோல் பாளையங்கோட்டை, டவுன், பேட்டை, பழைய பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கி கிடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

மேலப்பாளையம் பகுதியில் மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் அரசு பொறியியல் கல்லூரி அருகே மரம் முறிந்து நான்குவழிச்சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். மேலும் நெல்லை வண்ணார்பேட்டை தீப்பாச்சி அம்மன் கோவில் எதிரே தேங்கிய மழைநீரில் ஜீப் சிக்கிக் கொண்டது. 

இதேபோல் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த கால நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்