திண்டுக்கல்லில் ஊரடங்கு தளர்வால் களைகட்டிய கடைவீதிகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைவீதிகள் களைகட்டின. பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் திண்டுக்கல் நகரம் திருவிழா கோலம் பூண்டது.

Update: 2021-06-07 16:10 GMT
திண்டுக்கல்:
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைவீதிகள் களைகட்டின. பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் திண்டுக்கல் நகரம் திருவிழா கோலம் பூண்டது. 
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மளிகை, அரிசி விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இருப்பினும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. 
இந்தநிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி மளிகை, காய்கறி விற்பனை கடைகள், வாகன பழுதுநீக்கும் கடைகள், இறைச்சி கடைகள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து நேற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். 
கடைவீதிகளில் குவிந்த மக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கடைவீதிகளில் மக்கள் சாரை, சாரையாக குவிந்தனர்.  திண்டுக்கல் மேற்குரதவீதி, காந்திமார்க்கெட் ரோடு, பழனி ரோடு மற்றும் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. மளிகை கடைகள் நேற்று மட்டுமே திறந்திருக்கும் என பொதுமக்கள் நினைத்துக்கொண்டார்களோ? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு மளிகை கடைகள், காய்கறி கடைகளில் பொதுமக்கள் தேனீக்கள் போல் முண்டியடித்தபடி நின்று பொருட்களை சாக்கு பைகளில் வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.
இதேபோல் நகரின் மற்ற முக்கிய வீதிகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் திண்டுக்கல் நகரமே நேற்று திருவிழா கோலம் பூண்டது. 
கொரோனா அபாயம்
இது ஒருபுறம் இருந்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இத்தனை நாட்கள் வீட்டில் இருந்தவர்கள் நேற்று கடைவீதிகளில் கூட்டநெரிசல் ஏற்படும் அளவுக்கு திரண்டதால் திண்டுக்கல்லில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவானதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.  அதேநேரம் இறைச்சி, மீன் கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது என்பது சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. திண்டுக்கல்லில் கொரோனா பரவல் குறைந்து வரும் இந்த நேரத்தில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் செய்திகள்