கொரோனா ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய வால்பாறை படகு இல்லம்

வால்பாறை,மே.6- கொரோனா ஊரடங்கு காரணமாக வால்பாறை படகு இல்லம் வெறிச் சோடியது.

Update: 2021-05-05 16:53 GMT
வால்பாறை

கொரோனா ஊரடங்கு காரணமாக  வால்பாறை படகு இல்லம் வெறிச் சோடியது. 

வால்பாறை 

குளு குளு சூழலையும், அருவிகளையும், பசுமை மாறா காடுகளையும் தனக்குள் வைத்து இருக்கும் வால்பாறையை சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் பகுதி என்று கூறுவது உண்டு. அந்த அ ளவுக்கு அங்கு சீதோஷ்ண நிலை இருக்கும். 

காயப்போடப்பட்ட பச்சை ஜமுக்காளம் போல் காட்சி தரும் தேயிலை தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத அடர் வனங்கள், மலைச்சிகரங்களில் சடுகுடு விளையாடும் மேகங்கள் என்று பார்த்து மகிழ்பவர்களை பூலோக சொர்க்கம் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சம் பகுதியாக வால்பாறை இருக்கிறது. 

படகு இல்லம் 

இங்கு சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை, 9-வது கொண்டை ஊசி காட்சி முனை பகுதி உள்பட பல்வேறு சுற்றுலா மையங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர். 

எனவே மேலும் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் படகு இல்லம், தாவரவியல் பூங்கா ஆகியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கி முடிந்தது. 

வெறிச்சோடியது 

அத்துடன் படகு இல்லத்தில் சோதனை ஓட்டமும் நடந்தது. இதனால் பலர் இங்கு வந்து இலவசமாக படகு சவாரி சென்றனர். இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. 

இதனால் இங்குள்ள சுற்றுலா மையங்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. படகு இல்லத்தில் சவாரி நடக்காததால் பார்க்க தண்ணீர் நிரம்பிய குளம்போல காட்சி அளிக்கிறது. 

இதன் காரணமாக உள்ளூர் வாசிகள் மட்டும் இந்த படகு இல்லத்தை பார்த்து ரசித்துவிட்டு செல்கிறார்கள். எனவே சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட படகு இல்லம் தற்போது பார்வைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மாற்று ஏற்பாடு 

இது குறித்து வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, வால்பாறையில் படகு இல்லம் அமைக்கும் பணி நடந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். தற்போது அந்த படகு இல்லம் சவாரி செல்ல தயாராக உள்ளது. ஆனால் கொரோனா காரணமாக அதில் சவாரி செய்ய முடிவது இல்லை. 

மேலும்  கொரோனா தாக்கம் காரணமாக சுறுசுறுப்பாக இருந்த வால் பாறை தற்போது அமைதியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் ஏராளமான வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வியாபாரிகள் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்