கணவன் உள்பட 4 பேர் கும்பலுக்கு தொடர்பு

அருமனையில் கள்ளநோட்டுகளுடன் பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் உள்பட 4 ேபர் கும்பலுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இந்த கும்பல் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

Update: 2021-04-28 19:16 GMT
அருமனை:
அருமனையில் கள்ளநோட்டுகளுடன் பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் உள்பட 4 பேர் கும்பலுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இந்த கும்பல் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
கள்ளநோட்டுகளுடன் பெண் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிக்ககம் பகுதியை சேர்ந்தவர் சிந்து (வயது34). பளுகல் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், அருமனை அருகே அம்பலக்கடையில் முந்திரி தொழிலாளர்களுக்கு கடன் தருவதாக கூறி கள்ளநோட்டுகளுடன் வந்தார்.
இந்த தகவலை அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் அருமனை போலீசார் சிந்துவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.53 லட்சம் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 4 பேருக்கு தொடர்பு
இதற்கிடையே சிந்து கைதானதை தொடர்ந்து அவருடைய கணவர் ஷிபு மற்றும் ஜெரால்ட் ஜெபா, விஜயகுமார், எட்வின்ராஜ் ஆகிய 4 பேருக்கும் இந்த கள்ளநாட்டு விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் போலீசார் விசாரணையின் போது சிந்து, இந்த ரூபாய் நோட்டுகள் சினிமாவில் பயன்படுத்தக்கூடியவை என்றும், திரைப்பட இயக்குனர் கேரளாவைச் சேர்ந்த சந்தோசுக்கு சொந்தமானது என்றும் கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குனரிடம் மோசடி?
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது முதலில் இந்த கள்ளநோட்டு கும்பலுக்கும், திரைப்பட இயக்குனருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதுதொடர்பாக இயக்குனரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும் சிந்து, அவருடைய கணவர் உள்ளிட்ட கும்பல் முந்திரி ஆலை உரிமையாளர்கள், ஏராளமான தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் ேமாசடி செய்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் சந்தோஷிடமும் சிந்து கும்பல் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாமோ? என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இயக்குனரிடம் விசாரணை நடத்தினால் தான் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.
பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கலாம்
இதற்கிடையே சிந்து அருமனை, களியக்காவிளை, மார்த்தாண்டம் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அப்படி சிந்துவால் ஏமாற்றப்பட்டவர்கள் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்