ஆம்பூர் அருகே கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை

ஆம்பூர் அருகே கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-28 12:08 GMT
ஆம்பூர்

கட்டிட மேஸ்திரி

ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதி அருகே உள்ள சீக்கஜுனை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மகன் திருமலை (வயது 24). இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

 இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் திருமலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நாயக்கனேரி மலைப்பகுதி அருகே உள்ள ஏரிக்கரையை கடந்தபோது வழியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (21), ராஜ்குமார் (22), சேட்டு (20), சக்திவேல் (23) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் உள்பட 4 பேரும் சேர்ந்து திருமலையை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். அதற்குள் சந்தோஷ் உள்பட்ட அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பொதுமக்கள் திருமலையை ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் திருமலை உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், ராஜ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சேட்டு, சக்திவேல் ஆகிய இருவரிடம்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்