தாரமங்கலம் அருகே கைத்தறி நெசவாளர்கள் தர்ணா போராட்டம்

தாரமங்கலம் அருகே கைத்தறி நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-27 23:28 GMT
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே கைத்தறி நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைத்தறி நெசவாளர்கள்
தாரமங்கலம் அருகே மல்லிக்குட்டை கிராமம் அத்திராம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய அரசின் மூலமாக சர்வோதய சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதாவது சங்கத்தின் வாயிலாக மூலதன பொருட்களை வழங்கி அதன் மூலம் உற்பத்தி செய்த ஆடைகளை பெற்றுக்கொண்டு, அதற்கான கூலியை நெசவாளர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றது.
தர்ணா போராட்டம்
மேலும் இந்த சர்வோதய சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை, நலநிதி, மானியம் என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு நெசவாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் சர்வோதய சங்கத்தில் அரசு மானியம் முறைகேடாக அபகரிக்கப்பட்டு வருவதாகவும், போலி பயனாளிகள் இருப்பதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் சர்வோதய சங்க அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சர்வோதய சங்க அதிகாரிகள் மூலப்பொருட்களான பாவு. பட்டு ஆகியவற்றை வழங்குவதை நிறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கைத்தறி தொழில் முடங்கி விட்டதாக கூறி கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்துடன் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நேற்று அத்திராம்பட்டியில் உள்ள கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரம்
இது குறித்து நெசவாளர்கள் கூறும் போது, முறைகேடு பற்றிய தவறான தகவலை நம்ப வேண்டாம். இதன் காரணமாக உண்மையான கைத்தறி நெசவாளர்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.  அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொடர்ந்து பாவு, பட்டு ஆகியவை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.
நெசவாளர்களின் தர்ணா போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்