100 ஆண்டுகளானாலும் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சியை தரும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் பேச்சு

100 ஆண்டுகளானாலும் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சியை தரும் என முன்னாள் அமைச்சர் ஜெயபால் கூறினார்.

Update: 2021-03-31 03:10 GMT
திருவிடைமருதூர்,

‌தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் யூனியன் எஸ்.வீரமணியை ஆதரித்து அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவிடைமருதூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளருமான ஜெயபால், மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. பாரதிமோகன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி.கே. அசோக்குமார் கருணாநிதி, முத்துகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தயாளன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் குழுவாக இணைந்து கிராமம் கிராமமாக சென்று கட்சியின் நிர்வாகிகளிடம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

அந்த வகையில் ஆடுதுறை வீரசோழன் திருமண மண்டபத்தில் ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணியினருக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் பேசுகையில், நடிகை நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசிய எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கி தி.மு.க. நடவடிக்கை மேற்கொண்டது. 
ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவின் மீது தி.மு.க. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. கட்டுக்கோப்பான கட்சி. அதனால் தான் ஜெயலலிதா இறந்த பிறகும் கட்சி பிளவுபடவில்லை.

இன்னும் 100 ஆண்டுகளானாலும் சிறப்பான ஆட்சியை அ.தி.மு.க. தரும். கொள்கையுடன் கட்சி செயல்படும். ஒரு கலந்தாய்வு கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பெண்கள் எழுச்சியோடு பங்கேற்கும் நிகழ்வு இங்கு தான் பார்க்க முடிகிறது. இதுவே திருவிடைமருதூர் தொகுதியில் யூனியன் எஸ் வீரமணி வெற்றி பெற்றுவிட்டார் என்பதை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. 

நாட்கள் குறைவாக உள்ளது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். நாட்டையும், கட்சியையும் கட்டுக்கோப்பாக வழிநடத்திய இயக்கம் அ.தி.மு.க. அதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்’ என்றார் இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி வீரமுத்து, ஒன்றிய துணை செயலாளர் சதீஷ்ராஜ், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் ரவி, ஆடுதுறை நகர செயலாளர் செல்வம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்க நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்