வாழப்பாடி அருகே சாலை விபத்தில் பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் பெண் பலி

Update: 2021-03-29 23:32 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே சாலை விபத்தில் பெண் பலியானார். விபத்துக்கு காரணமான வாலிபரை கைது செய்யக்கோரி, இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விபத்தில் பெண் பலி
வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 35), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுகவனேஸ்வரி (32). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், கொட்டவாடி சாலையிலுள்ள குல தெய்வ கோவிலுக்கு சுகவனேஸ்வரி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அத்தனூர்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அருள்மணி (26) என்ற வாலிபர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சுகவனேஸ்வரி மீது பலமாக மோதியது. 
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்ட இப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
சாலை மறியல்
இந்நிலையில், விபத்துக்கு காரணமான வாலிபரை கைது செய்ய வேண்டும், விபத்தில் பலியான சுகவனேஸ்வரியின் குழந்தைகளுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த அவரின் உறவினர்கள் அத்தனூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாழப்பாடி பேளூர் சாலையில் நேற்று காலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு இம்மானுவேல் சேகரன், வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், சாவித்திரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
விபத்துக்கு காரணமான வாலிபரை கைது செய்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்