வீரபாண்டி பிரிவில் காப்பகத்தில் இருந்து தப்பிய இளம்பெண் மீட்பு

வீரபாண்டி பிரிவில் காப்பகத்தில் இருந்து தப்பிய இளம்பெண் மீட்கப்பட்டார்.

Update: 2021-03-28 23:31 GMT
இடிகரை,

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த நடராஜ்-வசந்தி தம்பதியின் மகள் நந்தினி (வயது 26). இவர் கடந்த சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 

இதையடுத்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவிலுள்ள மனநல காப்பகத்தில் நந்தினியை சேர்த்தனர்.  ஆனால் இவருக்கு காப்பாகத்தில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் அவர் ஏற்கனவே 2 முறை காப்பகத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அதன்பிறகு காப்பகத்தினர் அவரை மீட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் காப்பகத்தில் இருந்து தப்பினார். இதுகுறித்து காப்பகத்தினர் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 

காளிபாளையத்தில் தவித்த நந்தினியை அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புசெல்வன் தலைமையில் பொதுமக்கள் மீட்டு உணவு கொடுத்து உபசரித்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை கண்ட நந்தினியின் தங்கை ராதா உடனடியாக இவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் மற்றும் காப்பகத்தினர் நந்தினியை அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்