திருமண மண்டபங்களில் தேர்தல் பணிகள் நடந்தால் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் நடந்தால் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-03-09 14:24 GMT
திருப்பதூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் நடந்தால் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து திருமண மண்டப உரிமையாள்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவன் அருள் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது:-

உரிமையாளர் மீது நடவடிக்கை

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கண்டிப்பாக முன் அனுமதி பெற்றிருக்கவேண்டும். மேலும் அரசியல் ரீதியான கூட்டங்கள் நடைபெறுவதற்கு தேவாலயங்கள், மசூதிகள், 
கோவில்கள், அதனோடு இணைந்த மண்டபங்களை எந்த நிலையிலும் வாடகைக்குவிட அனுமதியில்லை. 

திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடத்திட தடையில்லை. ஆனால் திருமணங்களில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள், வாக்கு சேகரிப்பு போன்ற தேர்தல் பணிகள் நடத்திடுவது கண்டறிப்பட்டால் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

பொருட்கள் வைக்க தடை

வாடகைக்கு விடப்படும் மண்டபங்களின் வாடகை ரசீதுகள் வெளிப்படை தன்மையுடன் வைத்திருக்க வேண்டும். யாரேனும் பொருட்கள் இருப்பு வைப்பதற்கு மண்டபம் வாடகைக்கு விடுவதும் தடைசெய்யப்படுகிறது. திருமணங்கள் நடத்திட பதிவு நாட்கள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

 கோவில், மசூதி, தேவாலய வளாகங்களில் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. வளாகத்திற்கு வெளியே பிரசாரம் மேற்கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு எண் 1800 425 5671 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்