6 பவுன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பால் கூட்டுறவு சங்கத்தில் குவிந்த பொதுமக்கள்

6 பவுன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பால் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-02-27 13:47 GMT
கோவில்பட்டி, பிப்:
தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 6 பவுன் தங்க நகை கடன் தள்ளுபடி என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குவிந்தனர். அப்போது சிலரிடம் நகைகளை மட்டும் அடகு வைத்துவிட்டு, ‌மற்றவர்களை பின்னர் வரும்படி டோக்கன் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டோக்கன் வாங்கிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நகைகளுடன் கடன் வைக்க சென்றபோது, அது நேற்றுடன் முடிந்து விட்டது என்று கூறி உள்ளே இருந்த ஊழியர்கள் கதவடைத்து வெளியேறினர். இதனால் அங்கு குவிந்திருந்த‌ பெண்கள், கூட்டுறவு சங்கத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஆனால் தள்ளுபடி என்பது அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தான் வழங்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்