கேரட் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி

கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2021-02-26 13:41 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலி பிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். 

அதில் கடந்த சில மாதங்களாக கேரட் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

விலை வீழ்ச்சி

இதனால் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, கட்டப்பெட்டு, வ.உ.சி. நகர், காவிலோரை, கூக்கல்தொரை, மசக்கல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டனர்.

தற்போது கேரட் நன்கு விளைந்து அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

மேலும் அறுவடை செய்த கேரட்டுகளை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றனர். 

கிலோ ரூ.4-க்கு கொள்முதல்

இதுகுறித்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
கேரட்டுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைத்ததால், ஏராளமான விவசாயிகள் கேரட் பயிரிட்டனர். 

ஆனால் தற்போது வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்து, கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. 

இதனால் அறுவடை செய்த கேரட்டுகளை விளைநிலங்களில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லும் சரக்கு வாகன வாடகை கூலிக்கு கூட வருமானம் கிடைக்கவில்லை. 

இதனால் கேரட்டுகளை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வருகிறோம். இதனால் எங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. 

எனவே அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்