ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் பணம் மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

ஈமு கோழி பெயரில் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-12-15 01:21 GMT
கோவை, 

சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 33). இவருடைய மனைவி ராதா (30). இவரது சகோதரர் கத்தேரி பகுதியை சேர்ந்த ராஜா (36). இவர்கள் 3 பேரும் கடந்த 2012-ம் ஆண்டில் சேலத்தில் ஜெய் ஈமு கோழி பண்ணை நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த பண்ணை நிறுவனத்தின் சார்பில் ஈமு கோழி வளர்க்க ஷெட் அமைத்து தரப்படும். தீவனம், மருத்துவ செலவு செய்து தரப்படும். மாதம் ரூ.6 ஆயிரம், ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவித்தனர்.

வி.ஐ.பி திட்டத்தில் மாதம் ரூ.7 ஆயிரமும், ஆண்டு போனசாக ரூ.25 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஈமு கோழி வளர்க்க விரும்புவோர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செலுத்தவேண்டும். 6 ஈமு கோழி தரப்படும். 2 ஆண்டில் டெபாசிட் செய்த தொகை திரும்ப வழங்கப்படும் என ஈமு கோழி பண்ணை நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

ரூ.2 கோடியே 33 லட்சம் மோசடி

இதை தொடர்ந்து சேலம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈமு கோழிவளர்ப்பு திட்டத்தில் பணம் டெபாசிட் செய்தனர். இதில் 173 பேர் ரூ.2 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 500 டெபாசிட் செய்திருந்தனர். இவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேலம் ஒமலூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தலா 10 ஆண்டு சிறை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை டேன்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி ரவி உத்தரவிட்டார். மேலும் 3 பேருக்கும் ரூ.1 கோடியே 29 லட்சத்து, 75 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 3 பேரும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு தீர்ப்பு

இதுபோன்று சேலத்தில் மற்றொரு நிறுவனமான, அபி ஈமு கோழி பண்ணை மற்றும் அக்ரோ பார்ம் நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கிலும் ரஞ்சித்குமார், ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தனர். இவர்களுடன் ராஜாவின் மனைவி சசிகலா (30) இடம் பெற்று இருந்தார். இதில் ரூ.5 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 550 மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்குமார், ராஜா, அவருடைய மனைவி சசிகலா ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு தரவேண்டும். ஒவ்வொரு நபரும் தலா ரூ.1 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். நேற்று ஒரே நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த 2 வழக்குகளிலும் தண்டனை பெற்றவர்கள் ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை அறிவிக்கப்பட்ட சசிகலா நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இவரை கைது செய்து சிறையில் அடைக்க பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்