அரியலூரில் பரபரப்பு: பெண் தூய்மை பணியாளர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

அரியலூரில் பெண் தூய்மை பணியாளர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-14 22:44 GMT
அரியலூர், 

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணிகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கொரோனா காலத்தில் மிகச்சிறந்த முறையில் இவர்கள் பணியாற்றியதால், கொேரானா தொற்று பரவல் குறைந்தது. இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒப்பந்தம் முடிவு பெற்று ஓராண்டு ஆகியும் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.. இதையடுத்து கடந்த 30-ந் தேதி காலை நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை தங்களுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது மற்றும் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 7 நாட்களுக்குள் வருங்கால வைப்பு நிதியை பணியாளர்களுக்கு ஒப்படைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில், போராட்டம் குறித்து ஒப்பந்த தூய்மை பணியாளர் மீனாட்சி விளக்கி கூறினார்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் மீனாட்சிக்கு மழைக்காலத்தில் ஆண்கள் செய்ய வேண்டிய சிரமமான பணி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மீனாட்சி கேட்டதால், கடந்த ஒரு வாரமாக மீனாட்சிக்கு பணி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த மீனாட்சி, நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அருகில் விவசாயிகளின் போராட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக ஓடிவந்து தண்ணீரை ஊற்றி மீனாட்சியை மீட்டனர். பின்னர் அவரை அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு வந்த தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்