திருவள்ளூர் அருகே டிரைவர் குத்திக்கொலை; நண்பரின் தந்தை, சகோதரர் கைது

திருவள்ளூர் அருகே டிரைவர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பரின் தந்தை-சகோதரரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2020-12-13 20:25 GMT
அசோக்குமார்
குத்திக்கொலை
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). கார் டிரைவர் ஆவார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அசோக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சதீஷ் என்பவர் அவரை வெளியே அழைத்துச் சென்றார்.

அசோக்குமார் சென்ற சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு அசோக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து இறந்த அசோக்குமாரின் தாயார் தனபாக்கியம் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணை
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் தலைமையில் வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அசோக்குமாரை அழைத்துச் சென்ற நண்பரான சதீஷ் தலைமறைவாகிவிட்டதால், அவரது தந்தை ராஜா மற்றும் சகோதரர் முத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை மறியல்
இந்நிலையில் வெள்ளவேடு போலீசார், இறந்த அசோக்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்