இன்று விருதுநகர் வருகை: முதல்-அமைச்சரை வரவேற்க திரண்டு வாருங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அழைப்பு

விருதுநகருக்கு இன்று வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க திரண்டு வாருங்கள் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

Update: 2020-11-10 21:30 GMT
விருதுநகர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நடப்பு ஆண்டிலேயே மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதுடன், கட்டுமான பணிகளையும் தொடங்கி வைத்து வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வசதியாக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளதுடன் அடுத்த கட்டமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடும் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நீர்வள மேம்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை படைக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். மேலும் நீர்நிலைகள் மேம்பட கொரோனா ஊரடங்கு காலத்திலும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தேசிய அளவில் கொரோனா நோய் பரவல் கட்டுப்படாமல் உள்ள நிலையில் தமிழகத்தில் அவரே மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் பரவலை தடுக்க ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கியதன் மூலம் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

சாதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மதியம் விருதுநகர் வருகை தர உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

தொடர்ந்து விவசாயிகள், தொழில் முனைவோர், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளார். இதனை தொடர்ந்து 8,466 ஏழை, எளிய பயனாளிகளுக்கு ரூ.45 கோடி 36 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும், ரூ.28 கோடியே 74 லட்சம் மதிப்புள்ள 30 திட்டப்பணிகளை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.11 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இம்மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியையும், கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்களையும் தந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க இம்மாவட்ட மக்களும், அ.தி.மு.க. வினரும் திரளாக வர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன். செல்லும் இடமெல்லாம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். முதல்- அமைச்சர் வருகையால் இம்மாவட்டம் மேலும் ஏற்றம் பெறும் என்பது மட்டும் உறுதி.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்