மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு: பள்ளிகளை திறக்க 60 சதவீதம் பேர் ஆதரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 60 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2020-11-10 05:00 GMT
திண்டுக்கல்,

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில், மாணவ- மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விரும்பிய உயர்கல்வியை பெறுவதற்கு, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம். எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 160 உயர்நிலைப்பள்ளிகள், 230 மேல்நிலைப்பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இதையொட்டி 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர வைத்து, பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது மழைக்காலம் என்பதால் கொரோனா பரவிவிடும் வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி வந்ததும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில பெற்றோர் கூறினர். ஆனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், உரிய பாதுகாப்பு மற்றும் சுழற்சி முறையில் வகுப்பு நடத்துவது உள்ளிட்ட நடைமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 390 பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால், 60 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும், என்றார்.

மேலும் செய்திகள்