மாவட்டத்தில், புதிதாக 42 பேருக்கு கொரோனா உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 15,795ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 795ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-10-13 10:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 186 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 611 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை.

14 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 71 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இம்மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் பாலம்மாள் நகரைச் சேர்ந்த 45 வயது பெண், சூலக்கரை வ.உ.சி. நகரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, 75 வயது முதியவர், ஏ.ஏ.ரோட்டைச் சேர்ந்த 45 வயது நபர், எரிச்சநத்தத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, டி.வேப்பன்குளம், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த 12 பேர், பந்தல்குடியைச் சேர்ந்த 7 பேர், சென்னல்குடி, அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 50 வயது பெண், நல்லமங்கலம், ராஜபாளையம் விஷ்ணுநகரைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 795ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் 565 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் கிராமப்புறங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமப்புறங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்