கொரோனாவால் உயிரிழக்கும் கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு - மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனாவால் உயிரிழக்கும் கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரும் வழக்கில், மாநில அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போலீசார், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களும் அதிகளவில் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் போலீசார், மருத்துவ பணியாளர்கள், கள பணியாளர்களை தியாகிகளாக அறிவிக்க கோரியும், அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு கேட்டும் சமூக சேவகர் கேத்தன் தீரோட்கர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் ஐகோர்ட்டில் நடந்தபோது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் என்ற சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீடு செய்யப்படுவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், அந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அனுஜா பிரபு தேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசு தெரிவித்துள்ள பதில் சாதாரணமானது. கொரோனாவால் உயிரிழக்கும் கள ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தான் நாங்கள் அறிய விரும்புகிறோம். இதற்காக ஏதேனும் சட்டம் அல்லது கொள்கை இருக்கிறதா? என தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா கேட்டார். இதையடுத்து மாநில அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.