“சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” - நெல்லை புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக மணிவண்ணன் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார். அப்போது அவர், “சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Update: 2020-07-15 22:15 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஓம் பிரகாஷ் மீனா, சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை மதுரையில் இருந்து கார் மூலம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஏற்று கொண்டார். பின்னர் அவர் நெல்லை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்றார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் எனக்கு பழக்கப்பட்ட மாவட்டம் தான். நான் ஏற்கனவே நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி இருக்கிறேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் இன்னும் சிறப்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு மேம்படுத்தப்படும். எந்த நேரமும் என்னை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தப்படும். அதன் எண் விரைவில் தெரிவிக்கப்படும்.

அதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். சிறிய புகார் கூட பதிவு செய்யலாம். என்னை நேரில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. புகார் பதிவு செய்த 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் புகார் மனுவுக்கு தீர்வு காணப்படும்.

கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வர வேண்டும். அப்படி அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் சைபர் கிரைம் அலுவலகம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் சைபர் கிரைம் கிளப் என்று ஒன்றை உருவாக்கினோம். அதேபோல் நெல்லை மாவட்டத்திலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இ-பாஸ் இல்லாமல் கிராமங்கள் வழியாக நெல்லை மாவட்டத்துக்குள் வருபவர்களை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்