மேல்செங்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்றவர் சாவு: பெண்ணின் பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியல்

மேல்செங்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பெண் இறந்தார். தொடர்ந்து அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-14 22:30 GMT
செங்கம், 

செங்கம் அருகே உள்ள அந்தனூர் மதுரா கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், விவசாயி. இவரது மனைவி சுதர்சனா (வயது 42). இவர்களுக்கு தங்கராஜ், விஜராஜ் என 2 மகன்கள் உள்ளனர். தங்கராஜ் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். விஜயராஜ் பி.காம் முடித்துள்ளார்.

இந்த நிலையில் தர்மலிங்கத்துக்கும், அவரது சகோதரர் ஆறுமுகத்துக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மேல்செங்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுதர்சனாவின் மகன் விஜயராஜ், கணவர் தர்மலிங்கம், சகோதரர் முனிராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது.

இந்த தகராறில் சுதர்சனாவின் மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் சுதர்சனா கூறி வந்தார். படிக்கும் மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விட்டதே என்றும் அவர் வருத்தத்தில் இருந்தார். இதுகுறித்து போலீசாரிடம் நியாயம் கேட்க சம்பவத்தன்று மேல்செங்கம் போலீஸ் நிலையத்திற்கு சுதர்சனா சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பெண் காவலர் ஒருவர் சுதர்சனாவின் வீட்டுக்கு சென்று அவரது சகோதரர் முனிராஜிடம் சுதர்சனா விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதர்சனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுதர்சனாவின் உறவினர்கள், மேல்செங்கம் போலீசார் தான் சுதர்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் சுதர்சனாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை சுதர்சனாவின் உடலை செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மேல் செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுதர்சனாவின் உறவினர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை அவர்கள் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்வை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்