கடன் தொல்லை காரணமாக தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கோவில் அர்ச்சகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடன் தொல்லை காரணமாக தென்காசி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோவில் அர்ச்சகர் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2020-07-14 22:15 GMT
தென்காசி,

தென்காசி தெற்குமாசி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 54). இவர் காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மனுவை, பெட்டியில் போடுமாறு கூறினார்கள். ஆனால் அவர் கலெக்டரிடம் தான் நேரில் மனு கொடுப்பேன் என்றார். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.

இந்த நிலையில் அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சந்திரசேகரன் கொண்டுவந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தலைமை பட்டராக வேலை செய்து வருகிறேன். அப்போது எனக்கு அடிக்கடி கோவிலுக்கு வந்து செல்லும் தென்காசி செண்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா தாஸ் என்ற கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் எனது மகன் வெளிநாட்டு வேலை விஷயமாக 2017-ஆம் ஆண்டு மாரியப்பன் என்பவரிடம் ரூ.2 லட்சமும், பின்னர் எனக்கு உடல் நலக்குறைவு காரணமாக 2018-ம் ஆண்டு ரூ.1 லட்சமும் கடனுதவி பெற்றேன். அதற்கு ஈடாக நான் எனது வீட்டின் ஒரு பகுதி, பகுதியாக நம்பிக்கை கிரையம் எழுதிக் கொடுத்தேன். மேலும் இதற்கான வட்டித் தொகையை எனது வங்கிக் கணக்கில் எடுத்துக் கொள்வதாக கூறி வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை அவர்கள் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள். அப்போது முதல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் மாரியப்பனின் சகோதரர் கண்ணன் என்பவரிடம் வட்டி பணத்தை செலுத்தி வந்தேன்.

இந்த தொகைக்கு 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நான் அவரிடம் வாங்கிய மொத்த தொகையையும் நேரில் கொடுக்க சென்றேன். அப்போது மாரியப்பன் உன் வீட்டை முழுமையாக எழுதி வாங்கிவிட்டேன். மேற்படி வீட்டிற்கான தொகையை உனது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டேன் எனவும், வீட்டை காலி செய்து தர வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் மாரியப்பன், கோபி, கண்ணன் மற்றும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அருண் பிரகாஷ் ஆகிய 4 பேரும் கூட்டு சதி செய்து எனது வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்தை செலுத்தி எனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பல்வேறு தேதிகளில் பண பரிமாற்றம் செய்துள்ளனர். எனவே சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள எனது வீட்டை மீட்டு தந்து என்னை ஏமாற்றியவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் அர்ச்சகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்