கடலூரில் சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு: மீனவர்கள் குடும்பத்துடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-12 00:00 GMT
கடலூர், 

சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் சில்வர் பீச்சில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண் உள்பட 6 மீனவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.

சுருக்குமடி வலைக்கு தடை

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் துறைமுகத்தில் இருந்து பல மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வந்ததாக தெரிகிறது.

பின்னர் இந்த மீன்களை விற்பனைக்காக எடுத்து சென்ற 7 லாரிகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை ஏலம் விடப்போவதாகவும் அறிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மீனவர்களும், வியாபாரிகளும் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய லாரிகளுக்கு ரூ.50 ஆயிரம், மினி லாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மீனவர்கள் போராட்டம்

இந்த நிலையில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று காலை கடலூர் சில்வர் பீச்சில் திரண்டனர். மேலும் கருப்புக்கொடியுடன் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளை கடலில் நிறுத்தி வைத்திருந்தனர்.

பின்னர் மீனவர்கள் கடற்கரையில் அமர்ந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க கோரியும், மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

தீக்குளிக்க முயற்சி

அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தீயணைப்பு அதிகாரி சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

நீண்ட நேரமாகியும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததை கண்டித்து பெண் உள்பட 6 மீனவர்கள் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடோடி சென்று மீனவர்களின் கையில் இருந்த மண்எண்ணெய் கேன்களை பறிமுதல் செய்ததோடு, அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தீக்குளிக்க முயன்ற மீனவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் முடிந்த சில நிமிடங்களில் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், அங்கு வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையத்தில் மீனவர்கள், வியாபாரிகள் ஆகியோரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உருவபொம்மை எரிக்க முயற்சி

இதற்கிடையே மீன்வளத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோரின் உருவப்படத்துடன் கூடிய உருவபொம்மையை மீனவர்கள் எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த உருவபொம்மையை பறித்தனர்.

இதற்கிடையே போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே மீனவர்கள், வியாபாரிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

===

(பாக்ஸ்) கடலில் மயங்கி விழுந்த பெண்

மீனவர்களின் போராட்டத்தின் போது சில பெண்கள் கடலில் இறங்கி போராட்டம் செய்தனர். அப்போது கடல் சீற்றமாக இருந்ததால் சில பெண்கள் ராட்சத அலையில் சிக்கி தவித்தனர். இதில் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த வெண்ணிலா(வயது 46) என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மற்ற பெண்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

உடனே போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார், கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்து கரைக்கு அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் வெண்ணிலாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற போலீசாரை மீனவர்கள் தடுத்தனர். ஆனால் அவர்களின் பிடியில் இருந்து வெண்ணிலாவை போலீசார் மீட்டனர். பிறகு ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு முன்னதாகவே வெண்ணிலாவுக்கு சுயநினைவு திரும்பியதால் அவரை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்